மேரி கிரேபியெல் | Women Missionary to India | Biography Tamil |Mary Graybiel

ஊழிய அர்ப்பணிப்பும் பெற்ற வாக்குத்தத்தமும்

மேரி கிரேபியெல் (Mary Graybiel) என்பவர், 1882ஆம் ஆண்டு சுவிசேஷத்தை அறிவிக்க கடல் கடந்து பயணம் செய்த நான்கு பெண்மணிகளின் ஒருவர். மேரி தன் சிறுவயதில், ஆன் ஹாஸ்ஸெல்ட்டைன் ஜட்சன் (Ann Hasseltine Judson) என்ற தேவ ஊழியரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்ததும், ஊழியத்தின் மீது வாஞ்சை கொண்டார். மேரி வயதில் வளர வளர, தான் மிஷனரி ஆக வேண்டும் என்ற வாஞ்சையும் தீவிரமடைந்தது. ஒரு நாள், பஃப்பலோ என்னும் ஊரில் ஒரு ஞாயிறு பள்ளி நிறுவனத்தில் பங்கேற்றார். அப்பொழுது, இந்தியாவில் மிஷனரி பணிக்கென பெண்களை விண்ணப்பிக்க கோரி, “கிறிஸ்டியன் விமன்ஸ் போர்ட் ஆஃப் மிஷன்ஸ்” (கிறிஸ்தவ மகளிர் ஊழிய வாரியம்) வெளியிட்ட ஓர் சுற்றறிக்கையை கண்டெடுத்தார். அந்த ஊழிய வாய்ப்பை குறித்து ஜெபித்த பிறகு, “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்ற வேதவசனத்தின் மூலம் வழிநடத்துதலை பெற்றார். தேவ சித்தம் தன் வாழ்வில் உறுதியானதும், ஊழியத்திற்குச் செல்லும் தன் விருப்பத்தை எழுத்தின் மூலம் பெண்கள் வாரியத்திற்கு தெரிவித்தார்.

பம்பாயில் ஊழியம்

1882ஆம் ஆண்டில் பம்பாய் வந்தடைந்து, இந்தியாவின் மத்திய பகுதியில் வசித்துவந்தார். அவர் ஆரம்பநாட்களில் எல்லிச்பூர், ஹர்தா மற்றும் முங்கேலி ஆகிய ஊர்களில் ஊழியம் செய்து, அங்கிருந்து பிலாஸ்பூர் சென்றார். அங்கு அவர் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வீடுகளுக்கும், சந்தைகளுக்கும் சென்று ஊழியத்தை துவங்கினார். அருகிலுள்ள கிராமங்களை சுவிசேஷமயமாக்க, எய்டா பாய்ட் என்ற ஊழியருடன் பயணங்களை மேற்கொண்டார். எய்டா பெண்களை குறிக்கோளாக வைத்து ஊழியம் செய்ய, மேரி சிறுவர்களை தெரிந்துகொண்டார்.

பிற சமூக சேவைகள்

1882ஆம் ஆண்டு, தன் சொந்த செலவில் பள்ளிக்கூடம் ஒன்றையும், அதே சிறுமிகளை தாங்கும்வகையில் ஆதரவு இல்லம் ஒன்றையும் நிறுவினார். பிலாஸ்பூரில் அப்பள்ளி மற்றும் ஆதரவு இல்லத்தின் கட்டுமான பணிகளையும் மேற்கொண்டார். 1894ஆம் ஆண்டு, கிறிஸ்தவ தடயமே இல்லாத மஹோபா என்னும் ஊரில் மற்றொரு ஊழிய பணித்தளத்தை நிறுவினார். அங்கு ஆதரவு இல்லம் ஒன்றை கட்டி, பஞ்சம் தேசத்தில் பேரழிவை விளைவித்தபோது, 800 சிறுவர்களை பட்டினியினின்று காப்பாற்றினார்.

மேரி தன் திறன்கள் அனைத்தையும் ஊழியத்திற்க்காகவே உபயோகித்தார். அவர் ஒரு கட்டிட வடிவமைப்பாளராகவும், கட்டிட கலைஞராகவும், அநேக பெண்களுக்கு அன்புள்ள சகோதரியாகவும், அநேக ஆதரவற்ற சிறுவர்களுக்கு பாசமுள்ள ஒரு தாயாகவும் திகழ்ந்தார். பெரும்பாலும், அவர் ஓய்வெடுக்க விரும்புவதில்லை. கிறிஸ்துவுக்கென பல புதிய சாதனைகள் புரிந்து, 1935ஆம் ஆண்டில் தன் மரணப்பரியந்தம் ஓடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *