சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள சுவிஸ் ப்ரதரென் சபையின் நிறுவனர்களில் ஒருவரான ஃபெலிக்ஸ், அந்த சபையின் முதல் இரத்த சாட்சியும் ஆவார். அவர் எபிரேய, கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் அறிஞராக இருந்தார். அவரது தந்தை சூரிச்சில் உள்ள கிராஸ்மான்ஸ்டர் சபையில் பாதிரியாராக இருந்தார்.
சுவிட்சர்லாந்தில் ஒரு கிறிஸ்தவ சீர்திருத்தவாதியான உல்ரிச் ஸ்விங்லி 1519 ஆம் ஆண்டில் சூரிச் நகரத்திற்கு வந்தார். அப்பொழுது ஃபெலிக்ஸ் அவருடன் ஆர்வத்துடன் சேர்ந்து, அவர் நடத்திய வேதபாட வகுப்புகளில் தவறாமல் கலந்து கொண்டார். அந்த குழுவில் இருந்த கான்ராட் கிரேபல் ஃபெலிக்ஸின் நெருங்கிய நண்பரானார். அவர்கள் இருவரும் சேர்ந்து வேதவசனங்களைப் படித்து, கத்தோலிக்க திருச்சபையில் வேததத்திற்கு புறம்பான நடைமுறைகளைக் கண்டித்தனர்.
குழந்தையாக இருக்கும்போதே ஞானஸ்னானம் கொடுப்பதையும் சபையின் மீது அரசின் அதிகாரத்தையும் ஃபெலிக்ஸ் உறுதியாகக் கண்டித்தார். ஞானஸ்நானம் பெறுவது பகுத்தறிவின் மூலமாகவோ அல்லது பயத்தின் மூலமாகவோ செய்யப்படக்கூடாது என்று அவர் நம்பினார். “கிறிஸ்தவர்” என்ற பெயர் இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே பொருந்த வேண்டும் என்றும், ஞானஸ்நானம் பெற்ற அனைவரையும் கண்மூடித்தனமாக கிறிஸ்தவர்கள் என்று அழைக்கக்கூடாது என்றும் ஃபெலிக்ஸ் வாதிட்டார். ஒரு புதிய வெளிப்பாடாக வந்த அவரது கோட்பாடுகள் நெருப்பைப் போல பரவி, சூரிச் நகரத்தில் பலரின் இதயங்களை மாற்றின.
என்றபோதிலும், நகர்ப்புற சிந்தனையாளர்களின் சபை (சிட்டி கவுன்சில்) ஃபெலிக்ஸின் சீர்திருத்தவாத கருத்துக்கள் சபையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதினர். எனவே அதிகாரிகள் அவரைப் பிரசங்கிக்க தடை விதித்து, ஃபெலிக்ஸ் தனது நம்பிக்கைகளை திரும்பப் பெறும்படி கட்டளையிட்டனர்.
இருப்பினும், ஃபெலிக்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்பதைக் காட்ட ஒருவருக்கொருவர் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, கர்த்தருடைய பந்தியையும் அனுசரித்தார்கள்.
இந்த எழுப்புதல் காட்டுத்தீ போல பரவியதால், பலர் அதை ஏற்றுக்கொண்டு சம்மதத்துடன் ஞானஸ்நானம் பெற்றனர். ஃபெலிக்ஸ் மிகுந்த உற்சாகமாக பிரசங்கித்தார், மேலும் அவரது போதனைகளை மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்தார். இதன் காரணமாக அவர் பல முறை கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
1526 ஆம் ஆண்டில் நகர்ப்புற சிந்தனையாளர்களின் சபை (சிட்டி கவுன்சில்) ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அது என்னவென்றால், பெரியவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றால் தண்ணீரில் வீசப்பட்டு மரணமடைவார்கள். இந்த சட்டத்தால் முதல் இரத்த சாட்சியாக மரித்தவர் ஃபெலிக்ஸ் அவர்கள். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்போது சத்தியத்திற்காக மரணமடைய ஆயத்தமே என்று அவர் கூறினார். ஒரு கயிற்றில் கட்டப்பட்ட ஃபெலிக்ஸ், ‘இன்டு தை ஹேண்ட்ஸ் ஐ கம்மெண்ட் மை ஸ்பிரிட்’ (உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்) என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டே லிம்மாட் நதியில் மூழ்கிவிட்டார்.
பிரியமானவர்களே, நீங்கள் மதத்தினாலே கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்களா, அல்லது உண்மையான சீடர்களாக இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறீர்களா?
“கர்த்தாவே, பெயரளவிலான கிறிஸ்தவத்திலிருந்து என்னை விடுவித்து, உண்மையாக உம்மைப் பின்பற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்!”