பாவ வாழ்வும் இரட்சிப்பும்
ஒரு ஏழைக் குடும்பத்தில் லில்லிஹாம்மர் என்ற ஊரில் நார்வே நாட்டில் 04-02-1840 அன்று பிறந்தார். லார்ஸ் ஓல்சன் ஸ்க்ரெஃப்ஸ்ரட் குறைந்தளவில் கல்வி பெற்றவர். அவர் தனது இளமை பருவத்தில் மோசமான தொடர்புகளுக்குள் சிக்கி கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகவும் ஒரு திருடனாகவும் மாறினார். தனது பத்தொன்பது வயதில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது அன்னா ஓல்சம் என்ற அவரது தோழி அவரை சந்தித்து, வேதாகமத்தையும் பிற நற்செய்தியின் இலக்கியங்களையும் படிக்க ஊக்குவித்தார். இறுதியில் லார்ஸ் தனது பாவமான வாழ்க்கையைப் பற்றி மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
மிஷனரியாக அர்ப்பணிப்பு
21 வயதில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், விரைவிலேயே மிஷனெரி பயிற்சிக்காக ஜெர்மனியிலுள்ள கோஸ்னர் மிஷன் சொசைட்டியில் சேர்ந்தார். அங்கு இரண்டு வருடங்கள் அவர் உபவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் தனது ஆவி, ஆத்தும, சரீரங்களுக்கு கர்த்தரை சேவிக்கும்படி பயிற்சி அளித்தார். 1863 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு புறப்பட்ட அவர், கல்கத்தாவின் வடக்கே வாழ்ந்த சந்தால் என்ற பழங்குடியினரிடையே ஒரு மிஷனை தொடங்கினார். அவரது தோழியான அன்னாவும் அவருடன் சேர்ந்துக்கொண்டார். பின்பாக அவர்கள் இருவரும் விவாகத்தில் ஒன்றினைக்கப்பட்டனர்.
இந்தியாவில் அவரது ஊழியம்
சந்தால் மக்கள் அங்குள்ள ஜமீன்தார்களால் ஒடுக்கப்பட்டு இருந்தார்கள். மேலும் உயர் சாதி இந்து மக்களால் நிர்மூலமாக்கப்படுவார்களோ என்ற ஆபத்தான நிலையில் அவர்கள் இருந்தார்கள். லார்ஸ் அவர்களின் மொழியைக் கற்றுக் கொண்டு அதை எழுதுவதற்கான ஒரு முறையை உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல், வேதாகமத்தை சாந்தாலி மொழியில் மொழிபெயர்த்து, அங்குள்ள ராகங்களை பயன்படுத்தி பாமாலைகளையும் வெளியிட்டார். அவர் ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும்போது நூற்றுக்கணக்கான மக்கள் கூடுவார்கள். “எங்கள் குறிக்கோள் அவிசுவாசத்தை ஒழிப்பதே தவிர தேசியவாதத்தை அல்ல” என்று அவர் கூறினார். எனவே, அவர் கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையில் பல கிறிஸ்தவ திருச்சபைகளை ஸ்தாபித்தார், அதே நேரத்தில் அவை அவர்களின் பிராந்தியத்தின் தன்மையையும் பிரதிபலித்தன. அவரது ஊழியத்தின் விளைவாக, 1890 ஆண்டு வரும்போது சந்தால் மிஷனில் ஞானஸ்நானம் பெற்ற 6,000 உறுப்பினர்கள் இருந்தனர்.
பிற சேவைகள்
சந்தால் மக்களின் நல்வாழ்வைப் பற்றியும் அக்கறை கொண்ட அவர், ஒடுக்கப்பட்ட அவர்களின் நிலைமையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர்களை சுதந்தர்களாக்க அவர்களுக்கு வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தச்சு வேலை ஆகியவற்றை பிற தொழில்களுக்கு குறித்தான விலையேற திறன்களைக் கற்பிப்பதற்காக பள்ளிகளை நிறுவினார். அவரது ஊழியம் அண்டை மாநிலங்களான ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அசாமுக்கும் விரிவடைந்தது. 1910ஆம் ஆண்டில் அவர் இவ்வுலகில் தனது ஓட்டத்தை முடித்தபோது, அங்குள்ள சந்தால் பழங்குடியில் 15,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இருந்தனர்! . இவர் 11-12-1910 அன்று இறைவனடி சேர்ந்தார் .